விசைப்படகுகளில் மீன்பிடிக்க உற்சாகத்துடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்க உற்சாகத்துடன் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

Update: 2023-06-15 18:45 GMT

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், என்ஜீன், வலை உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தடை உத்தரவு பைபர் படகுகளில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ெபாருந்தாது. இதனால் பைபர் படகு வைத்திருந்த மீனவர்கள் மட்டும் வழக்கம்போல் குறிப்பிட்ட தொலைவிற்குள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு முதல் கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான விசைப்படகு மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க உற்சாகத்துடன் சென்றனர். முன்னதாக அவர்கள் தங்களது படகுகளில் சிறப்பு பூஜை செய்தனர். ஒரு சில மீனவர்கள் நேற்று காலை ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

மீன்கள் விலை குறையும்

நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிக அளவில் மீன்கள் வலையில் சிக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்றுள்ளனர். விசைப்படகு மீனவர்கள் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள். மீன்பிடி தடைக்காலத்தால் கடலூர் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்துள்ளதால், மீன்கள் வரத்து அதிகரிக்கும். இதன் மூலம் மீன்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்