பூண்டியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

பூண்டியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-21 18:45 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள கள்ளிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பூண்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் கடையை திறக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொளஞ்சி தலைமையில் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பூண்டி கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கோரிக்கை மனு

பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தாலுகா அலுவலகத்தில் இருந்த தலைமையிடத்து துணை தாசில்தார் இளஞ்சூரியனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக குணமங்கலத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடிவிட்டு, அதை பூண்டி காலனியில் உள்ள காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பள்ளிக்கூடம் ஆகியவற்றுக்கு மிக அருகில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே பூண்டி கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட தலைமையிடத்து துணை தாசில்தார் இளஞ்சூரியன், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்