மோசடி ஆவண பதிவை ரத்துசெய்து சொத்து உரிமையாளருக்கு ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

போலி ஆவணங்கள் மூலம் நடந்த மோசடி ஆவண பதிவை ரத்துசெய்து, சொத்து உரிமையாளர்களுக்கு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-09-28 23:47 GMT

சென்னை,

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம்-1908-ன்படி, பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே அந்த ஆவண பதிவுகளை ரத்துசெய்ய பாதிக்கப்பட்டோர் கோர்ட்டை அணுக வேண்டியதிருந்தது. எனவே தமிழ்நாட்டிற்கு பொருந்தும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்தது.

போலி, ஆள்மாறாட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஜனாதிபதி கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார். போலி ஆவணங்களின் பதிவை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு திருத்தப்பட்ட சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

சிறை தண்டனை

நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்ட பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தை ரத்து செய்து ஆணையிட மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணையின்மீது பதிவுத்துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.

மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தை பதிவு செய்தால் சம்மந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மோசடி பதிவு ரத்து

இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தை மீட்டெடுத்து கொடுக்கும் வகையில், மோசடி ஆவண பதிவுகளை மாவட்ட பதிவாளர் ரத்துசெய்ய பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி ஆவண பதிவு முற்றிலும் ஒழிக்கப்படும்.

போலி ஆவண பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் 5 பேருக்கு, நில அபகரிப்பாளர்களால் செய்யப்பட்ட மோசடி ஆவண பதிவை ரத்து செய்து அதற்கான ஆணைகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந்தேதி (நேற்று) வழங்கினார்.

தட்கல் டோக்கன் வசதி

நல்ல நாட்களாக கருதப்படும் நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் https://tnreginet.gov.in என்ற இணையவழியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர ஆவணப்பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடனே டோக்கன் பெறலாம். இந்த வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

திருமணச் சான்றிதழில் திருத்தம்

பல்வேறு சட்டங்களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு திருத்தம் செய்ய https://tnreginet.gov.in என்ற இணையவழி விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

உரிய திருத்தம் செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ் பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் பயனாளிக்கு இணையவழி அனுப்பப்படும். பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் கூடிய அச்சான்றிதழை விண்ணப்பதாரர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வசதிகளையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்