சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

Update:2023-03-25 00:15 IST

நாமக்கல்:

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

விவசாயிகள் வெளிநடப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மயில்களால் விவசாய பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில் மையத்தினர் கலந்து கொண்டு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை விளக்க வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி மின்கம்பங்களை நடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பேசினர்.

தீ வைப்பு சம்பவம்

அதைத்தொடர்ந்து விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் விவசாயிகள் சிலர், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிப்காட் அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர். அவருடன் கொ.ம.தே.க. ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமசிவம் மற்றும் விவசாயிகளும் வெளிநடப்புசெய்தனர்.

அதன் பிறகு பேசிய விவசாய சங்கத்தினர், பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியில் பெண் கொலை, வீடுகள் மற்றும் டிராக்டர்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. இருப்பினும் அந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை முழுமையாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கலெக்டர் எச்சரிக்கை

அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ஸ்ரேயாசிங், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும், தீ வைப்பு சம்பவங்களில் சேதம் அடைந்த டிராக்டர்கள் மற்றும் வீடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை முழுமையாக கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சேலம் கூட்டுறவு ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர்கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்