விக்கிரவாண்டி அருகேஊராட்சி மன்ற தலைவரை தாக்கி சட்டை கிழிப்புகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

விக்கிரவாண்டி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி சட்டையை கிழித்தவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-08-23 00:15 IST


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி தாலுகா காணை ஒன்றியம் திருக்குணம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பிரகாஷ் (வயது 45). இவர், கடந்த ஆண்டு டி.கொசப்பாளையம் ஏரியில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த 16 ஏக்கர் நிலம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திக்கு கொண்டு சென்று அந்த இடத்தை மீட்பதற்கு காரணமாக இருந்தார்.

இதன்பின்னர், ஊராட்சிக்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் மீட்கப்பட்ட இடத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தென்னங்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார்.

தாக்குதல்

இங்குள்ள தென்னைமரங்களில் இருந்து தேங்காய்களை பறிப்பதற்கான ஏலம் விடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மதியம் ஏலம் நடைபெற இருந்தது. இதற்காக ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் மற்றும் சிலர் ஏரி பகுதிக்கு வந்தனர்.

அப்போது, ஏற்கனவே அந்த பகுதியில் ஆக்கிரமித்து விவசாய பணியை மேற்கொண்டு வந்ததாக கூறப்பட்ட முட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த முட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (63), அவரது மனைவி சூடாமணி (55), மகள் தமிழேந்தி (31), கணபதி ஆகியோர் அங்கு வந்து, பிரகாசை தாக்கி அவரது சட்டையை கிழித்துள்ளனர்.

சாலை மறியல்

இதுபற்றி அறிந்த டி கொசப்பாளையம் கிராமமக்கள், ஊராட்சி தலைவர் பிரகாசை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கக்கனூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்,. காணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உாிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தம்பதி கைது

இதகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் செல்வராஜ், சூடாமணி, தமழேந்தி, கணபதி ஆகியோர் மீது கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், சூடாமணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் , தென்னைமரக்கன்றுகள் வைத்துள்ள இடத்தில் பாதுகாப்பு வேலி அமைத்துதரக்கோரி விழுப்புரத்தில் கலெக்டர் பழனியை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் கிராம மக்களுடன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்