அடிப்படை வசதிகள் இல்லாத கூத்தக்குடி ரெயில் நிலையம் விரைந்து நிறைவேற்றித்தர பயணிகள் கோரிக்கை
கூத்தக்குடி ரெயில் நிலையம் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. இதனை விரைந்து நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி ஊராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையம் வழியாக தினசரி, விருத்தாசலம்-சேலம் பயணிகள் ரெயில், காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரெயில் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்த ரெயில் நிலையத்திற்கு தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம் என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் ரெயில் நிலையத்தில் ஒரு இடத்தில் மட்டும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் கடும் அவதியடைகின்றனர்.
தகவல் பலகை
மேலும் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ரெயில் வந்து செல்லும் நேரம் குறித்த தகவல் பலகை பராமரிப்பின்றி உள்ளது. அதாவது பேனர்கள் கிழிக்கப்பட்டு அதன் கம்பிகள் மட்டும் தெரியும் வகையில் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் ரெயில் வரும் நேரம் தெரியாமல் மிகவும் சிரமமடைகின்றனர்.
எனவே கூத்தக்குடி ரெயில் நிலையத்தில் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதேபோல் ரெயில் வந்து செல்லும் நேரம் குறித்த தகவல் பலகையை சீரமைத்து தர வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
மேலும் சேலம் -மும்பை வரை செல்லும் அதிவிரைவு ரெயில், வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இயக்கப்படும் பாண்டிச்சேரி- கேரளா அதிவிரைவு ரெயில் ஆகியவை கூத்தக்குடி ரெயில் நிலையத்தில் நிற்பதில்லை. எனவே இந்த வழித்தடத்தில் செல்லும் மேற்கண்ட 2 அதிவிரைவு ரெயில்களும் கூத்தக்குடி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.