தடம் எண் இல்லாத மாற்று பஸ்களால் கிராம மக்கள் அவதி

தடம் எண் இல்லாத மாற்று பஸ்களால் கிராம மக்கள் அவதி;

Update:2022-08-24 17:46 IST

போடிப்பட்டி

உடுமலை பகுதி கிராமங்களுக்கு தடம் எண் இல்லாத மாற்றுப் பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொருளாதார சிக்கல்கள்

உடுமலை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பஸ் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். அதிலும் கொரோனா காலகட்டத்துக்கு பிறகு பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் பலரின் தேர்வாக பஸ் போக்குவரத்தே உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என்பது கிராமப்புற பெண்கள் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதற்கு பயனுள்ளதாக உள்ளது.

இந்தநிலையில் கொரோனாவுக்கு முன் இயக்கப்பட்ட பல கிராமப்புற பஸ்கள் முழுமையாக இயக்கப்படுவதில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது. அதேநேரத்தில் பழுது உள்ளிட்ட காரணங்களால் மாற்றுப் பஸ்கள் இயக்கப்படும்போது அதனை கிராம மக்கள் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

தடம் எண்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அரசு டவுன் பஸ்களில், எளிதாக கண்ணில் படும்படி தடம் எண் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். உடுமலை பஸ் நிலையம் போன்ற அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்லும் இடங்களில், தாங்கள் செல்ல வேண்டிய பஸ்சை கண்டுபிடிப்பதற்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும். ஆனால் ஒருசில பகுதிகளில் மாற்றுப் பஸ்கள் இயக்கப்படும் போது அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

அந்தவகையில் உடுமலையிலிருந்து சுண்டக்காம்பாளையம், ராகல்பாவி உள்ளிட்ட பகுதிகள் வழியாக அம்மாபட்டி செல்லும் 24 ம் எண் பஸ் கடந்த 8-ந் தேதி டிராக்டருடன் மோதி சிறு விபத்து ஏற்பட்டது.இதில் பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.இதனையடுத்து டிராக்டர் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கண்ணாடிக்கான தொகையைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த வழித்தடத்தில் மாற்றுப் பஸ் தான் இயக்கப்படுகிறது.இதனால் படிக்க தெரியாதவர்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் செல்ல வேண்டிய பஸ்சை அடையாளம் காண முடியாமல் தவற விடும் நிலை உள்ளது.எனவே வழக்கமான பஸ்சை பழுது நீக்கி இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும்.அல்லது மாற்றுப் பஸ் பெரிய அளவில் கண்களுக்குத் தெரியும்படி தடம் எண்ணை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நடைமுறையை எந்த பகுதியில் மாற்றுப் பஸ்களை இயக்குவதாக இருந்தாலும் பின்பற்ற வேண்டும்'என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்