இரட்டை தள மின்சார பேருந்து சேவை: எந்தெந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது தெரியுமா..?
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இரட்டைத் தள மின்சார (EV) பேருந்தின் முதல் சேவையை சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ் அவர்கள், சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம், அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் (NRI) மற்றும் அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து ரூ. 1.89 கோடி மதிப்பீட்டில் ஒரு இரட்டைத் தள மின்சார (EV) பேருந்தினை 12.01.2026 அன்று ஹிந்துஜா அறக்கட்டளை, மும்பை மூலமாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர்.
இப்பேருந்து மூலம் இயக்கப்படும் சுற்றுலா சேவைகள் சென்னை நகரின் வரலாற்று கலாச்சார மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடும் வகையில் இச்சுற்றுலா அமையும். இத்திட்டம் குறிப்பாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வரலாற்று தகவல் சார்ந்த மற்றும் அனுபவமிக்க சுற்றுலா அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று (14.01.2026) கெல்லீஸ் மற்றும் கொசப்பேட்டை அரசு காப்பகங்களில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் ராயபுரம் அரசு காப்பகத்தில் உள்ள ஆண் குழந்தைகள் என மொத்தம் 54 மாணவ மாணவிகளுடன் முதல் பாரம்பரிய கலாச்சார பண்பாடு சுற்றுலா நடைபெற்றது.
மேலும் பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு 15.01.2026 முதல் 18.01.2026 வரை மாலை நேரத்தில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 50-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை பார்வையிட வரும் பள்ளி மாணவ மாணவியர்களை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.