இருவர் உயிரிழப்புக்கு கிருமி கலந்த குடிநீரே காரணம்: திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு வளர்ச்சி குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கர்லாம்பாக்கம் காலனி கிராமத்தில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கும், 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும் அப்பகுதியில் வினியோகிக்கப்பட்ட பாக்டீரியா கலந்த குடிநீரைக் குடித்தது தான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படைத் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கர்லாம்பாக்கம் காலனியில் குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த ஏழுமலை, சுதா ஆகிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவத்திற்குப் பிறகு உடல் நலம் தேறியுள்ளனர். இந்த சோகத்தின் சுவடுகள் கர்லாம்பாக்கம் காலனியில் இன்னும் அகலவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகளை எடுத்து சென்னை கிண்டியில் உள்ள மாநில நீர் ஆய்வகத்தில் சோதனை செய்ததில், அந்த நீரில் இ -கோலி எனப்படும் பாக்டீரியா கலந்திருந்ததும், அதனால் தான் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன என்பதும் தெரியவந்துள்ளது. அதே ஊரில் முதன்மை சாலையில் உள்ள குடிநீர் குழாயிலிருந்தும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளின் தரம் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்லாம்பாக்கம் காலனியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரில் முறையாக குளோரின் கலக்கப்படாதது தான் பாக்டீரியா கிரிமி தாக்குதலுக்கு காரணம் என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில் குடிநீர் வழங்குவதில் மிகுந்த அலட்சியம் காட்டப்பட்டிருப்பதும், குடிநீரில் குளோரின் கலக்க வேண்டும் என்ற அடிப்படைக் கடமையைக் கூட திமுக அரசு நிறைவேற்றத் தவறி விட்டதும் உறுதியாகியிருக்கிறது.
மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று ஆகும். அதற்காக ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி வழங்குகிறது. அதற்குப் பிறகும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கத் தவறியதற்காக திமுக அரசு வெட்கப்பட வேண்டும். அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு வளர்ச்சி குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கத் தவறிய தோல்விக்கு பொறுப்பேற்று, உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சமும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் திமுக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.