சங்கிக்குழுவில் பராசக்தி குழு - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம்

கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார்.;

Update:2026-01-14 13:05 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஆட்சியிலும் பங்கு வேண்டுமென்ற குரலை தீவிரமாக்கி உள்ளனர். இதன்படி 2006-ம் ஆண்டு செய்த பிழையை இந்த முறை செய்ய மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார்.

2026-ஆம் ஆண்டின் சட்டசபை தேர்தலுக்கு என தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் அமையவிருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறும்போது, ஆட்சியிலும் பங்களிக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக மாணிக்கம் தாகூர் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த சூழலில், காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் பராசக்தி படம் தோல்வி என்று தன் நண்பர் சொன்னதாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சங்கிக்குழுவில் பராசக்தி குழு என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில், “சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு.. ஆனா ஜனநாயகன் முடக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார். இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்பட பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர்.

ஏற்கெனவே தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என்றெல்லாம் பேசிவந்த மாணிக்கம் தாகூர், த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசிவருவதால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், பராசக்தி குறித்த மாணிக்கம் தாகூரின் பதிவு தி.மு.க. தலைமையையே சீண்டும் வகையில் இருப்பதாக தி.மு.க.வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்