கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் அவதி; நடவடிக்கை எடுக்கப்படுமா?

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2022-10-10 06:33 GMT

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிகள் தீவிர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, பிணவறை, பழைய மருந்து கிடங்கு, அம்மா உணவகம் போன்ற இடங்களின் முன்பு தேங்கி நிற்கும் மழைநீர் அகற்றப்படாமல் உள்ளது. கல்லூரி மைதானத்திலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மறுவாழ்வியல் துறை கட்டிடம் முன்பு சாலையில் மழைநீர் கழிவுநீரோடு கலந்து தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதன் எதிரில் உள்ள ஆண்கள் கருத்தடை மையம் முன்பு கழிவுநீர் கசிந்து சாலைக்கு செல்கிறது. ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் சில இடங்களில் குண்டும், குழியுமாக இருப்பதால் மழைநீர் தேங்க வசதியாக உள்ளது. மழைகாலம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. இனிவரும் 2 அல்லது 3 மாதங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யுமானால் சிரமப்படுவது நோயாளிகளும், ஆஸ்பத்திரி பணியாளர்களும்தான். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் கவனித்து உடனடி நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்