கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு:தீர்த்தமலையில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Update: 2022-12-30 18:45 GMT

அரூர்:

தீர்த்தமலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம் தீர்த்தமலை ஊராட்சியில் தீர்த்தமலை, கட்டவடிச்சாம்பட்டி, பொய்யப்பட்டி, குரும்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. தீர்த்தமலை ஊராட்சி மன்ற அலுவலகம் பொய்யப்பட்டியில் உள்ளது. இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் பழுதடைந்துள்ளதால் அதனை இடித்து விட்டு பொய்யப்பட்டியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க தீர்த்தமலையில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தை புதியதாக அமைய உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மாற்றும் பணியில் ஊராட்சி தலைவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தீர்த்தமலை பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

உண்ணாவிரத போராட்டம்

இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீர்த்தமலை பஸ் நிறுத்த பகுதியில் கூடினர். பின்னர் அங்கு சாமியானா பந்தல் அமைத்து திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை பொய்யப்பட்டிக்கு மாற்றக்கூடாது என்றும், தற்போது உள்ள அலுவலகத்தை இடித்து அகற்றி விட்டு இங்கேயே புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை கேட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கத்தினர் கடைகளை அடைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்