வால்பாறையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி- காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்

வால்பாறையில் மின்சாரம் தாக்கி சத்துணவு பெண் அமைப்பாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update:2022-07-20 20:37 IST

வால்பாறை

வால்பாறையில் மின்சாரம் தாக்கி சத்துணவு பெண் அமைப்பாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சத்துணவு அமைப்பாளர்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் தோட்ட அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் பாபு. இவரது மனைவி முத்துமாரி (வயது 47). இவர் வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். கணவன்,மனைவி இருவரும் வெளியே சென்று விட்டு  வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர். பின்னர் குளிப்பதற்காக வீட்டில் உள்ள குளியல் அறையில் தண்ணீரை சூடாக்கும் வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து குளிக்க சென்ற முத்துமாரி ஹீட்டர் சுவிட்சை ஆப் பண்ணாமல் தண்ணீர் சூடாகி விட்டதா என்று பார்ப்பதற்காக கையை பாத்திரத்தில் விட்டு உள்ளார்.

மின்சாரம் தாக்கியது

அப்போது அவரை மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மனைவின் அலறல் சத்தம் கேட்டு பாபு அங்கு சென்று அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி உடனடியாக முடீஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாபுவை மீட்டு சிகிச்சைக்காக முடீஸ் எஸ்டேட் தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சோகம்

மேலும் முத்துமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வால்பாறையில் சத்துணவு அமைப்பாளர் மின் சாரம் தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்