பிளஸ்- 2 மாணவர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்;

Update:2022-06-21 21:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-2 மாணவர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக் காரன்புதூரை சேர்ந்தவர் சின்னத்துரை. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் உதயகுமார் (வயது 18). இவர், கோட்டூர் ராமசாமி கவுண்டர் வீதியில் உள்ள தனது தாத்தா முத்துசாமி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆங்கிலவழியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்ா நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், உதயகுமார் வேதியியல் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலம், தமிழ், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட 5 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் உதயகுமார் மனமுடைந்தார். நேற்று காலை உதயகுமாரின் பாட்டி மாரியம்மாள் கோவிலுக்கும், தாத்தா முத்துசாமி வேலைக்கும் சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உதயகுமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து வந்து உதயகுமார் உடலை மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேர்வில் தோல்வி அடைந்த பள்ளி மாணவர் தனது தாத்தா வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்