50 லட்சம் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: காணொலியில் பங்கேற்க அழைப்பு

தேர்வு எழுதவுள்ள 50 லட்சம் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கலந்துரையாடுகிறார்.

Update: 2023-01-24 18:36 GMT

சென்னை,

டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 27-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 11 மணியளவில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும். வகையில் ஆலோசனை வழங்குகிறார். மேலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பிரதமர் மாணவர்களுடன் காணொலியில் பதில் அளிக்கிறார்.

உலகின் மிகப்பெரிய தேர்வு திருவிழாவான 'தேர்வும், தெளிவும் (பரீக்ஷா பே சர்ச்சா)' என்ற பரீட்சையை பற்றி விவாதிப்போம் நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் தங்கள் பள்ளிகளில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கு கொள்ள உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவருடைய அனுபவங்களை, அறிவுரைகளை கேட்கலாம்.

சிறப்பு தொலைபேசி எண்

இது தவிர, Innovateindia.mygov.in மற்றும் NamoApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்களுடைய கருத்துகளை, ஆலோசனைகளை, அனுபவங்களை ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிரதமருக்கு அனுப்பி உள்ளனர்.

மேலும் ஒரு அரிய வாய்ப்பாக, மத்திய கல்வி அமைச்சகம் 1921 என்ற ஒரு சிறப்பு தொலைபேசி எண்ணை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தாங்கள் சொல்ல விரும்புவதை, தங்களுடைய குரலில் பதிவு செய்வதற்காக வழங்கி உள்ளது. இந்த சிறப்பு எண் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை பிரதமருக்கு தெரிவிக்கும்படி தமிழக 'தேர்வும், தெளிவும்' குழு கேட்டுக்கொள்கிறது.

பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுடன் அமர்ந்து பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மத்திய மந்திரிகள் தமிழகம் வர உள்ளனர். மேலும் தனிப்பட்ட முறையில் தேர்வு குறித்து தங்களுடைய அனுபவங்களையும் மந்திரிகள், மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்