பிரதமர் மோடி வருகை: 27-ந் தேதி பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்

வருகிற 27-ந்தேதி பல்லடம் நகரில் ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

Update: 2024-02-25 12:26 GMT

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி கலந்து கொள்ளும் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்லடம் நகரில் வருகிற 27-ந்தேதி ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

அதன்படி கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள், நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவினாசி வழியாக செல்ல வேண்டும். கோவையில் இருந்து பல்லடம் வழியாக மதுரை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நால்ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்ல வேண்டும்.

திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கொடுமுடி, கணபதிபாளையம், பெருந்துறை, அவினாசி வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீர் பந்தல், சின்னதாராபுரம், மூலனூர், குடிமங்கலம், பொள்ளாச்சி, வழியாக செல்ல வேண்டும்.

பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, தாராபுரம், அவினாசிபாளையம் வழியாக செல்ல வேண்டும். மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கோவை கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும்.

அதேபோல கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் இலகு ரக வாகனங்கள் சூலூர், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், கொடுவாய், காங்கயம், வெள்ளகோவில் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் காங்கயம், படியூர், திருப்பூர், அவினாசி வழியாக செல்ல வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்