போலீசார் பொய்வழக்கு பதிவு:பனை தொழிலாளர் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை தொழிலாளர்கள் மீது போலீசார் பொய்வழக்கு பதிவு செய்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக, தமிழ்நாடு நாடார் பேரவையினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.

Update: 2023-06-19 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை தொழிலாளர்கள் மீது போலீசார் பொய்வழக்கு பதிவு செய்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக, தமிழ்நாடு நாடார் பேரவையினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.டி.ரவிசேகர் தலைமையில், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் மில்லை எஸ்.தேவராஜ், அவைத்தலைவர் இருதயராஜ் மற்றும் பனைத் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பனைத் தொழிலாளர்கள் மீது விஷக்கள் இறக்குவதாக கூறி போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, பனைத் தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில் செய்யவும், ேபாலீசார் பொய் வழக்கு பதிவு செய்வதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

வீட்டுமனை பட்டா

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.அஸ்மத் உசேன் தலைமையில் கயத்தாறு சதக்அப்துல்லா தெருவை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், கயத்தாறு சதக்அப்துல்லா தெருவில் 67 பேருக்கு கடந்த 2007-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 60 பேர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். 10 ஆண்டுகள் ஆகியும் பட்டா விவரம் கிராம பதிவேட்டிலும், கணினியிலும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, விரைவாக கிராம பதிவேட்டிலும், கணினியிலும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கோவில்பட்டி பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் பார்வையற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் மற்றும் கழுகுமலை பகுதியில் வசிக்கும் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் 35 பேர் இலவச வீட்டுமனை கேட்டு கோவில்பட்டி உதவி கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகள் 35 பேருக்கும் இலவச வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நடவடிக்கை

கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கத்தை சேர்ந்தவர்கள், அதன் ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின் டிசோசா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனக் கலவரத்தில் கிறிஸ்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்டவும், சமய நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்