விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நிகழ்ச்சிகள் நடத்த தடை

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-08-17 18:46 GMT

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் நகராட்சியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது மற்றும் பொது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகில் அரசியல் கட்சியினர் மற்றும் ஊழியர் சங்கங்கள், பொதுநல அமைப்பினர் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதால் பொதுமக்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், வணிகர்களுக்கும் சிரமம் ஏற்படுவதோடு, போக்குவரத்துக்கும் இடையூறாக அமைகிறது.

நிகழ்ச்சிகள் நடத்த தடை

இதனால் ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் மட்டும் மேற்கண்ட நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கவும், பழைய பஸ் நிலையத்தில் பொது நிகழ்ச்சிகளை நடத்த நிரந்தர தடை விதிக்கக்கோரியும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன்பேரில் மேற்கண்ட நிகழ்ச்சிகளை நடத்த உரிய இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் சிறிது காலத்திற்கு விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், நன்முயற்சியாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மேற்கண்ட நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவ்வாறு புதிய இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதில் இடர்பாடுகள் ஏதேனும் ஏற்படின் அவற்றை களைவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், உதவி ஆணையர் (கலால்) சிவா உள்பட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்