டிரைவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

டிரைவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.;

Update:2022-12-07 00:15 IST

தேவகோட்டை, 

காரைக்குடி கழனிவாசல், பாண்டியன் நகரில் வசித்து வந்தவர் லாரி டிரைவர் ஜெயபிரபு (வயது 38). இவருடைய மனைவி தீபா. இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 21-ந் தேதி ஜெயபிரபு மாரடைப்பால் இறந்து விட்டதாக தீபா, ஜெயபிரபுவின் தந்தை ஆசிர்வாதம் மற்றும் உறவினர்களுக்கு கூறியதாக தெரிகிறது. மேலும் ஜெயபிரபுவின் உடலை தேவகோட்டை அருகே உள்ள ஜெயபிரபுவின் சொந்த ஊரான கொடுங்காவயலுக்கு எடுத்து சென்று அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக ஆசிர்வாதம், காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் அடக்கம் செய்யப்பட்ட ஜெயபிரபுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி நேற்று பகல் 12.30 மணிக்கு தேவகோட்டை தாசில்தார் செல்வராணி முன்னிலையில் ஜெயபிரபுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சிவகங்கை மருத்துவ கல்லூரி பிரேத பரிசோதனை நிபுணர் செந்தில்குமார் தலைமையில் அங்கேயே பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனையின் முடிவில்தான் ஜெயபிரபு எவ்வாறு இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்