மயானத்துக்கு செல்லும் சாலையில் பூக்களை வீசுவதற்கு தடை

குமாரபாளையம் நகரில் மயானத்துக்கு செல்லும் சாலையில் பூக்களை வீசுவதற்கு தடை செய்தனர்.

Update: 2023-02-18 18:45 GMT

குமாரபாளையம்

குமாரபாளையம் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் தினமும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் 5-க்கும் மேற்பட்ட அமரர் வாகனங்களில் இருந்து பூக்களை தூவுகின்றனர். மேலும் பட்டாசு வெடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் முக்கிய வீதிகள் மற்றும் மயானத்துக்கு செல்லும் வீதிகளில் அசுத்தம் ஏற்படுகிறது. பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபட்டு வருகிறது. இதனால் அங்கு குடியிருப்பவர்கள் குப்பை கூளங்களாலும், மாசுபட்ட காற்றை சுவாசிப்பதனாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சியில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன், ஆணையாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் ஆகியோர் மின் மயானத்திற்கு நேரில் சென்றனர். அப்போது மின் மயான ஊழியர்களிடம் மின் மயானத்துக்கு உடல்களை ஏற்றி வரும் அமரர் வாகனங்களில் மயான வீட்டிலிருந்து மாலைகளை ஏற்றக்கூடாது எனவும், சாலைகளில் பூக்களை வீசக்கூடாது என்றும், எச்சரிக்கையை மீறி பூக்களை வீசும் துக்க வீட்டினருக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும், அமரர் வாகனங்களில் மாலைகளை ஏற்றினால் அமரர் ஊர்தி டிரைவர் பணி இடை நீக்கம் செய்யப்படுவார் எனவும் எச்சரித்தனர். மேலும் மயானத்திற்கு எரியூட்ட பதிவு செய்ய வருவோரிடம் சாலைகளில் பூக்களை வீச மாட்டோம், பட்டாசு வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி படிவம் பெற்றுக் கொண்டு உடல்களைஎரியூட்டுவதற்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்