கபிலர்மலையில்அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்ேபாக்குவரத்து பாதிப்பு

Update: 2023-01-02 18:44 GMT

பரமத்திவேலூர்:

கபிலர்மலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டவுன் பஸ்கள்

திருச்செங்கோட்டில் இருந்து கபிலர்மலை வழியாக பரமத்திவேலூருக்கு தினந்தோறும் காலை, மதியம் மற்றும் இரவில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாமக்கல்லில் இருந்து கந்தம்பாளையம், இரும்புபாலம், குன்னமலை, குஞ்சாம்பாளையம் வழியாக கபிலர்மலைக்கு தினந்தோறும் காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் டவுன் பஸ் சென்று வருகிறது.

தற்போது இந்த 2 பஸ்கள் மதியம் மற்றும் இரவு நேரங்களில் உரிய வழித்தடங்களில் வந்து செல்வதில்லை என கூறப்படுகிறது. இதனால் கூலிவேலைக்கு செல்பவர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோர் அவதியடைந்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கபிலர்மலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை அங்கு வந்த அரசு பஸ்சை நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஜேடர்பாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்