‘பா.ஜ.க. யாரையும் மிரட்டி கூட்டணியில் சேர்க்கவில்லை’ - நயினார் நாகேந்திரன்
தி.மு.க. கூட்டணி பலமாக இருப்பதாக மாயை ஏற்படுத்தி வருகின்றனர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
நீலகிரி,
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று வந்த அவரை, மாவட்ட தலைவர் தருமன் தலைமையிலான பா.ஜ.க.வினர் வரவேற்றனர்.
பின்னர் ஊட்டி ஏ.டி.சி. மைதானத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-
“அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதால் அ.தி.மு.க. அழிந்து விடும் என மற்ற கட்சிகள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் யாரையும் மிரட்டி கூட்டணியில் சேர்க்கவில்லை. தி.மு.க. கூட்டணி பலமாக இருப்பதாக மாயை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுக்குள் கூட்டணியில் சலசலப்பு இருந்து வருகிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.