பால், காய்கறிகளை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல்
புதுக்கோட்டை அருகே பட்டவைய்யனார் கோவிலில் பால்குடம், அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டதால பொதுமக்கள் பால் மற்றும் அன்னதானத்திற்கு நறுக்கப்பட்ட காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பட்டவைய்யனார் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் பட்டவைய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவார்கள்.
மேலும் வெளியூர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டவர்கள் நேர்த்திக்கடனாக பெட்டைக் கோழி, மது பாட்டில்கள், நெல் வழங்குவது வழக்கம். அதனை சமைத்து படையல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
சமாதான கூட்டம்
இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகம் அன்று இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இணைந்து நிர்வாகிகளை நியமித்து திருவிழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது. பிறகு நோட்டீஸ் அச்சடித்து திருவிழா நடத்த சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு தரப்பினர் பால்குடம் எடுத்து, அன்னதானம் வழங்குவதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். பால்குடம் எடுப்பது புதிய நிகழ்வாக உள்ளது. மேலும் சமாதானக் கூட்டத்தில் சம்மதித்தது போல இரு தரப்பினரும் இணைந்து கூட்டம் நடத்தி முடிவெடுக்கவில்லை. அதனால் பால்குடம் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இன்னொரு தரப்பினரோ சம்பந்தப்பட்ட மற்றொரு தரப்பினருக்கும் தகவல் சொன்ன பிறகே பால்குடம் எடுத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
கோவிலில் காத்திருந்த அதிகாரிகள்
இந்த நிலையில் நேற்று இரவு இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்த கோட்டாட்சியர் முருகேசன் உத்தரவிட்டார். அதன்படி ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி உள்பட பலர் போலீஸ் நிலையத்திலும், கோவிலிலும் காத்திருந்தனர்.
அதில் ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்
இந்த நிலையில் இன்று காலை பால்குடம் எடுத்து அன்னதானம் வழங்க தயாராக இருந்த ஒரு தரப்பினர் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு பால் குடம் எடுக்கவும், அன்னதானம் வழங்கவும் அனுமதிக்கவில்லை என்று கூறி கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே பால்குடம் எடுக்க வாங்கிய பால், அன்னதானத்திற்காக நறுக்கப்பட்ட காய்கறிகள், மளிகை பொருட்களை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
51 பேர் கைது
இதையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.