சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்-கெங்கவல்லி அருகே பரபரப்பு
சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கெங்கவல்லி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
கெங்கவல்லி:
கெங்கவல்லி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் 95 பேரூர் பகுதியில் சின்ன காட்டுரில் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் எனவும், அந்த பகுதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மேலும் அந்த இடத்தில் தேங்கிய தண்ணீரில் பொதுமக்கள் நாற்று நட்டும், மீன் வலையை விரித்து மீன் பிடித்தும் போராட்டம் நடத்தினர். அப்போது, இந்த சாலை அமைப்பதுடன், பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்வி கூறுகையில், இந்த பகுதியில் சுமார் 8½ கிலோமீட்டர் தூரம் பிரதமரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. நிதி ஒதுக்கப்பட்டவுடன் சாலைகள் அமைக்கப்படும் என்றனர்.