வெறிநாய் கடித்து 15 பேர் காயம் நாய்த்தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

மேட்டூர் நகராட்சி பகுதியில் பரபரப்பு வெறிநாய் கடித்து 15 பேர் காயம் நாய்த்தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

Update: 2023-06-14 19:52 GMT

மேட்டூர்

மேட்டூரில் வெறிநாய் கடித்து 15 பேர் காயம் அடைந்தனர். நகராட்சி பகுதியில் நாய்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வெறிநாய் தொல்லை

ேமட்டூர் நகராட்சி பகுதியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் மேட்டூர் அனல்மின் நிலைய 4 ரோடு, மேட்டூர் அனல் மின் நிலைய குடியிருப்பு பகுதி, மாதையன் குட்டை, குள்ளவீரன்பட்டி உள்ளிட்ட பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது.

15 பேரை கடித்தது

இந்தநிலையில் அந்த வெறிநாய் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் 15-க்கும் மேற்பட்ட நபர்களை துரத்தி துரத்தி கடித்தது. இதில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதனால் நகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெறிநாய் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாததால்தான், 15-க்கும் மேற்பட்டவர்களை அந்த நாய் கடித்து குதறி உள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே நேற்று மாலை அந்த நாயை நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து அதற்கான தடுப்பூசி போட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மேட்டூர் நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் சிறு குழந்தைகள் சாலையில் நடமாடவே அச்சத்தில் உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளிலும் நாய்த்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்