ராகுல்காந்திக்கு சிறை தண்டனை தீர்ப்பு எதிரொலி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் சாலை மறியல்

வழக்கு ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியதை கண்டித்து, தலைமைச் செயலகம் எதிரே தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-23 23:46 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தகவல், தமிழக சட்டசபையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று காலை வந்து சேர்ந்தது. உடனே அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியே வந்தனர். சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் எம்.எல்.ஏ.க்கள். விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ் உள்ளிட்ட அனைவரும் தலைமைச் செயலக வளாகத்தில், தலையில் கருப்பு ரிப்பன் அணிந்தபடி பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அவர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு எதிராகச் சென்று ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அங்கு போக்குவரத்து தடைபட்டது. சிறிது நேரம் சாலையில் அமர்ந்தபடி அவர்கள் ஆவேசமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.

உண்மைக்கு புறம்பான வழக்கு

பின்னர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு சட்டசபை அலுவல்களில் பங்கேற்றச் சென்றனர். முன்னதாக செல்வப் பெருந்தகை அளித்த பேட்டி வருமாறு:-

ராகுல்காந்தியின் செயல்பாடுகளை முடக்க திட்டமிட்டு பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. மக்கள் பிரச்சினைகளை அவர் பேசுவதையும் ஒடுக்க திட்டமிட்டு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு.

உண்மைக்கு புறம்பான வழக்கு என்பதை கோர்ட்டில் தெளிவாக சுட்டிக்காட்டுவோம். பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்தியாவின் இறையாண்மைக்கும் சட்டத்திற்கும் எதிராக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்