வெப்பத்தை தணித்து ஈரோட்டை குளிர்வித்த மழை

வெப்பத்தை தணித்து ஈரோட்டை குளிர்வித்த மழை

Update: 2023-05-01 22:05 GMT

ஈரோட்டில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சிதோஷ்ண நிலை ஏற்பட்டது.

பலத்த மழை

தமிழகத்தில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஈரோட்டில் நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக 98 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. சுட்டெரித்த வெயில் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 5.30 மணிஅளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணிநேரம் பலத்த மழை கொட்டியது. அதன்பிறகு சுமார் 2 மணி நேரம் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக ஈரோட்டில் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது. ஈரோடு மணிக்கூண்டு நேதாஜி ரோடு பகுதியில் சாக்கடை கழிவுநீருடன் கலந்து மழைநீர் ஓடியது.

வெப்பம் தணிந்தது

தனியார் நிறுவனங்கள், கடைகளில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி சென்றார்கள். மழையில் நனையாமல் இருக்க பலர் குடையை பிடித்தபடியும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடியும் சென்றனர். இரவு வரை மழை தூறி கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து ஈரோடு மாநகரமே குளிர்ந்தது.

அதேசமயம் மழையால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு பஸ்நிலையம், வீரப்பன்சத்திரம், நாராயணவலசு உள்பட பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்