தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்: விரைவில் அறிவிப்பு

ரேஷன் கடைகளுக்கு ஒரே நாளில் சீராக விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

Update: 2024-05-24 00:53 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவுதுறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ரேஷன் கடைகள் பணி நேரம் மாற்றம் மற்றும் விடுமுறை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும், தற்போது மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமை விடுமுறை, முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகள் பணிநாளாக செயல்பட்டு வருகிறது.

ஒரே நாளில் சீராக விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்