நாகூர் கடற்கரையில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் அகற்றம்..

கச்சா எண்ணெய் குழாய்கள் அகற்றப்பட்டதால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-04-17 11:05 GMT

நாகை,

நாகை, நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2ம் தேதி உடைந்து கடலில் கலந்தது. இதனால், மீனவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. கச்ச எண்ணெய் குழாயை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே சிபிசிஎல் நிர்வாகத்தினர் உடைப்பை 3 முறை சரி செய்தனர். ஆனாலும் கச்சா எண்ணெய் மீண்டும் வெளியேறியது. இந்த நிலையில், நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் 7 கிராம மீனவர்கள், சிபிசிஎல் நிர்வாகம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சேர்ந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்தமாதம் 16ம் தேதி நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் நாகூர் பகுதியில் போடப்பட்டுள்ள மே.31ம் தேதிக்குள் குழாயை முற்றிலும் அகற்ற ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, நாகூர் கடற்கரையில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயை அகற்றும் பணிகள் நடைபெற்றது.

தற்போது ஒரு கிலோமீட்டர் வரை போடப்பட்ட குழாய்கள் அகற்றப்பட்டுவிட்டன. எண்ணெய் குழாய் நீளமாக உள்ளதால், வெல்டிங் மூலம் அதனை அறுத்து லாரியின் மூலம் சிபிசிஎல் நிறுவனத்திற்கு கொண்டுசெல்லும் பணிகள் நடைபெறுகிறது.

இந்த குழாய்கள் அகற்றப்பட்டதால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவர்கள், தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், சிபிசிஎல் நிறுவனத்திற்கும், பட்டினச்சேரி மற்றும் நாகூர் தாலுகா மீனவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்திருக்கிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்