எடப்பாடியில் எரிவாயு தகன மேடையை சீர் செய்திடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

எடப்பாடி நகராட்சி மயான எரிவாயு தகன மேடையை சீர் செய்திடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-13 20:12 GMT

எடப்பாடி, 

எரிவாயு தகன மேடை

எடப்பாடியில், ஜலகண்டாபுரம் பிரதான சாலையில், பெருமாள் கோவில் காலனி பகுதியில், பொது மயானம் அமைந்துள்ளது. இங்கு நகராட்சி பராமரிப்பில், எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு, அங்கு கொண்டு வரப்படும் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகிறது.

சமீபத்தில் எரிவாயு தகன மேடையில் இருந்து பல்வேறு நிலைகளில் அதிகப்படியான புகை வெளியேறுவதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்து இருந்தனர்.

சாலைமறியல்

தகனமேடை சீர் செய்யப்படாமல் செயல்பட்டு வந்த நிலையில், அப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரி செய்திடக்கோரி நேற்று மாலை பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எடப்பாடி-ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் எரிவாயு தகனம் மேடை சீர் செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில், அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

எடப்பாடி மயானத்திற்கு முன்பு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்