ஓய்வு பெற்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரி வீட்டில் 5 புவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரி வீட்டில் 5 புவுன் நகை, ரூ.1 லட்சம் திருடிட மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update:2023-03-22 00:15 IST

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரி வீட்டில் 5 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற அதிகாரி

தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 65). இவர் ஒ.என்.ஜி.சி.யில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்று விட்டாராம். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் கருப்பசாமிக்கும், மத்திய பாகம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் கதவை திறக்க முயன்று உள்ளனர். ஆனால் கதவை திறக்க முடியாததால், பக்கவாட்டில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். மேலும் மாடியில் உள்ள அறையிலும் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.

திருட்டு

இது குறித்து கருப்பசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை வரை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நகை, பணம் திருடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கருப்பசாமி ஊருக்கு வந்த பிறகே முழுமையான திருட்டு போன பொருட்கள் விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்