4 நகராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம்

4 நகராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது.;

Update:2023-06-24 22:46 IST

4 நகராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை இயக்குநர் (மாநகராட்சிகள்) பாரிஜாதம் வரவேற்றார்.

கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சிகளுக்கு உட்பட்ட தெருவிளக்குகள் எல்லாம் முறையாக பயன்பாட்டில் உள்ளதா என்று ஒவ்வொரு ஆணையாளரும் உறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் அதற்கு என்ன காரணம் என்று அறிறந்து தீர்க்க வேண்டும்.குப்பைகள் தினமும் பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை சம்பந்தப்பட்ட ஆணையாளர்கள், சம்பந்தப்பட்ட சுகாதார துறை சார்ந்த அலுவலர்கள் காலை 5 மணி முதல் நகராட்சி முழுவதும் மேற்பார்வையிட்டு நகரை தூய்மை படுத்தும் பணியினை உறுதி செய்ய வேண்டும்.

நமக்கு நாமே திட்டம்

நகராட்சியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வது யாருடைய கடமை என்று சொன்னால். அது ஆணையாளர்கள் மற்றும் பணியாளர்களுடைய கடமை தான். பெரும்பாலான இடங்களில் குப்பைகள் சரியாக எடுக்கப்படுவதில்லை என்று எனக்கு 'வாட்ஸ்அப்' மூலம் புகார் வருகின்றது.

நகராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். சாக்கடை தூய்மைபடுத்திய பிறகு அங்கிருக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தபட வேண்டும்.

மேலும் நான்கு நகராட்சிகளிலும் புறநகர் பகுதி அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே புறநகருக்கு சாலை அமைக்கும் கடமை அரசிற்கு உண்டு. ஆணையாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சாலை வசதிகளை புறநகரில் அமைப்பதற்கு அதற்கான நிதியை பெறுவதற்கு உறுப்பினர்களை அணுக வேண்டும்.

இவ்வாறு பல்வேறு அறிவுரைகளை வழங்கி அவர் பேசினார்.

அமைச்சர் உத்தரவு

மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட பூங்கா, நூலகம் மற்றும் அறிவுசார் மையம், சந்தை, எரிவாயு தகன மேடை, குடிநீர் வினியோகம், அம்ரூத் 2.0 பூங்கா, அம்ரூத் நீர்நிலை, பஸ் நிலையம், 15-வது மத்திய நிதி குழு (நகர்நல மையம்), நமக்கு நாமே திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்,

சாலை பணிகள் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டம் 2018-19, கசடு கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலை மேம்பாடுகள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம்,

தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றி அமைக்கும் பணி, வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி, பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீட்டு இணைப்பு வழங்கும் பணி என்பன உள்ளிட்ட திட்ட பணிகள் குறித்து ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

அரசிடம் நிலுவையில் உள்ள கருத்துருக்கள், நகராட்சியிலுள்ள முக்கிய பிரச்சனை மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறிந்து அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில கைப்பந்து சங்க துணைத்தலைவர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், நகர மன்ற தலைவர்கள் நிர்மலா வேல்மாறன், ஏ.சி.மணி, மோகனவேல், ஆணையாளர்கள் தட்சிணாமூர்த்தி, தமிழ்செல்வி, ரகுராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்