ஆபத்தான மின்கம்பத்தை அகற்றக்கோரி சாலை மறியல்

ஆபத்தான மின்கம்பத்தை அகற்றக்கோரி நேற்று எம்.ஜி.ஆர். காலனி பொதுமக்கள், கூடலூர்-குமுளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-31 19:30 GMT

கூடலூரில் வடக்கு காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கூடலூர்-குமுளி சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்தநிலையில் எம்.ஜி.ஆர். காலனி அருகே சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுவதுடன், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தான மின்கம்பத்தை கவனத்துடன் கடந்து சென்று வருகின்றனர். இதனால் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்தநிலையில் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றக்கோரி நேற்று எம்.ஜி.ஆர். காலனி பொதுமக்கள், கூடலூர்-குமுளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகுந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மின்வாரிய அதிகாரிகளிடம் போலீசார் பேசினர். அப்போது 3 நாட்களுக்குள் மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் கூடலூர்-குமுளி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்