சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-08-13 18:45 GMT

ரெட்கிராஸ் இயக்கம் உருவாக்கிய மனித நேயசட்டங்கள் கடந்த 1949-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி ஜெனிவா ஒப்பந்தங்களாக வடிவம் பெற்றது. அன்றைய நாள் ஆண்டு தோறும் ஜெனிவா ஒப்பந்த தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் நாமக்கல்லில் மாவட்ட ரெட்கிராஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலத்தை முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி, நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் தலைமை தபால் நிலையம், டாக்டர் சங்கரன்சாலை, திருச்சி சாலை, மணிக்கூண்டு, மோகனூர் சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம், விபத்துகளை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பொதுமக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ரெட்கிராஸ் மாணவ, மாணவிகள், வட்டார போக்குவரத்து துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்