திருப்பத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் மறியல்

திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-05-31 00:15 IST

திருப்பத்தூர், மே, 31-

திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை

திருப்பத்தூர் நகர் பஸ் நிலையம் அருகிலும், திருத்தளிநாதர் கோவில் பின்புறத்திலும் காரைக்குடி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் சுற்றிலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் உதவியோடு ஒரு சில பெட்டி கடைகளின் மூலமாக 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக அப்பகுதி பெண்கள் கூறுகின்றனர். மேலும் அப்பகுதியில் மது அருந்திவிட்டு பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது அவர்கள் வீட்டில் சென்று தகராறு செய்வதும் அவர்களது வீட்டு வாசலில் மது போதையில் உறங்குவதுமாக இருந்துள்ளனர்.

மதுபோதையில் அவ்வழியாக செல்லக்கூடிய பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்களிலும் மது பிரியர்கள் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியில் கடை முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் கடையை அகற்றுவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அமைச்சர் பெரியகருப்பனிடமும் பெண்கள் புகார் அளித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்