துணை ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சம் 'அபேஸ்'

கம்பத்தில் நூதன முறையில் துணை ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சம் ‘அபேஸ்’ செய்த நெல் வியாபாரி சிக்கினார்.

Update: 2023-06-28 19:30 GMT

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). இவர், துணை ராணுவமான மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வீரராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இவர், கடந்த 26-ந்தேதி கம்பத்தில் உள்ள தேசிய வங்கியில் தனது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்தை செலுத்துவதற்காக ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அங்கு ஏ.டி.எம். எந்திரம் வேலை செய்யவில்லை. இதையடுத்து வங்கிக்கு சென்று பணம் செலுத்துவதற்கான சீட்டை எடுத்து நிரப்ப முயன்றார்.

அப்போது வங்கியில் இருந்த ஒரு நபரிடம் பேனாவை கார்த்திக் கேட்டு வாங்கினார். உடனே அந்த நபர் தான் ரூ.1 லட்சம் எடுக்க வந்து இருப்பதாக கூறினார். தங்கள் பணத்தை என்னிடம் கொடுத்தால், அதை கார்த்திக்கின் வங்கி கணக்கில் 'போன்பே' செயலி மூலம் அனுப்புகிறேன் என்றார். இதை உண்மை என நம்பிய கார்த்திக் அவரிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்தார்.

மேலும் அந்த நபரிடம் இருந்து செல்போன் எண்ணை கார்த்திக் வாங்கினார். பின்னர் வீட்டுக்கு சென்று வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா? என்று பார்த்தார். ஆனால் பணம் வரவில்லை. வங்கியில் அறிமுகமான நபருக்கு போன் செய்தார். அவர் இணையதள பாதிப்பால் அனுப்ப முடியவில்ைல என்றார். சிறிது நேரம் கழித்து பணம் அனுப்பி விடுவேன் என்று கூறினார். ஆனால் அவர் பணம் அனுப்பவில்லை. இதனையடுத்து அவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. அப்போது தான் ஏமாற்றப்பட்டது கார்த்திக்கு தெரியவந்தது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அதில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கம்பம் ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்த நெல் வியாபாரி மணிமாறன் (41) என்பதும், கார்த்திக்கிடம் இருந்து நூதன முைறயில் பணம் 'அபேஸ்' செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்