பேராசிரியர் வீட்டில் ரூ.12¼ லட்சம் நகை, பணம் கொள்ளை
கோவை பீளமேட்டில் கல்லூரி உதவி பேராசிரியர் வீட்டில் ரூ.12¼ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
கோவை
கோவை பீளமேட்டில் கல்லூரி உதவி பேராசிரியர் வீட்டில் ரூ.12¼ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உதவி பேராசிரியர்
கோவை பீளமேடு ஜீவாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிகிறார். இவர் கடந்த 18-ந் தேதி மாலையில் தனது வீட்டை பூட்டி விட்டு பல்லடத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவில் வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த தங்க செயின், வளையல், மோதிரம் என 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.
ரூ.12¼ லட்சம் நகை, பணம் கொள்ளை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பிய சுரேஷ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.12¼ லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து சுரேஷ் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் கைரேகைகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து சோதனை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.