இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் விருதுடன் ரூ.5 லட்சம், விவசாயிக்கு பரிசாக வழங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.;
சென்னை,
தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
3-வது முறையாக...
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக 2021-ம் ஆண்டு வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் 3-வது முறையாக சட்டசபையில் நேற்று 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 81 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கழுத்தில் பச்சை துண்டு அணிந்து தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு வேளாண்மை பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய அவர் 12.07 மணிக்கு அதை நிறைவு செய்தார்.
2023-2024-ம் ஆண்டு பட்ஜெட்டில், வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து 6 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நம்மாழ்வார் பெயரில் விருது
* இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற இயற்கை விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் 'நம்மாழ்வார்' பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ரூ.5 லட்சம் பணப்பரிசு, பாராட்டு பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
* இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு, பயிர்க்காப்பீட்டு திட்டத்தை மிகுந்த நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. வரும் ஆண்டில், காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
* தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, 2022-23 அரவைப் பருவத்தில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான டன் ஒன்றுக்கு ரூ.2,821-க்கு மேல் கூடுதலாக ரூ.195 தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.253 கோடி வழங்கப்படும். இதன்மூலம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.
* வரும் ஆண்டில், 10 லட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு ரூ.15 கோடி நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும்.
வெளிநாடு பயணம்
* அயல்நாடுகள் சிலவற்றில் உயர் ரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தித்திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. எனவே, 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு என மத்திய, மாநில அரசு நிதியில் இருந்து ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தேனி மாவட்டத்தில், வாழைக்கென தனி அடையாளம் உருவாக்கி உலக சந்தைக்கு கொண்டு சேர்க்கும் விதத்தில், வாழைக்கென்று ஒரு தனி தொகுப்பு திட்டம் ரூ.130 கோடி நிதி மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
வாழைக்கு தனி ஆராய்ச்சி நிலையம்
* கடைமடைக்கும் பாசன நீர் செல்லும் வகையில், வரும் ஆண்டிலும் காவிரி, வெண்ணாறு வடிநிலப் பகுதியிலுள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 2-ம் கட்டமாக, 1,146 கி.மீ. நீளத்திற்கு 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி விருதுநகர் ஆகிய 6 தென் மாவட்டங்களில் வாழை 22 ஆயிரம் எக்டேரில் பயிரிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் வாழைக்கென ஒரு தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இதற்கென ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும்.
ரூ.14 ஆயிரம் கோடி பயிர்க்கடன்
* 2022-23-ம் ஆண்டில் இதுவரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் ரூ.12,648 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது கடந்த 10 ஆண்டு சராசரியைவிட 89 சதவீதம் அதிகமாகும். வரும் ஆண்டில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்கப்படும்.
* 2022-23 குறுவை, சம்பா கொள்முதல் பருவத்தில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து 27 லட்சத்து 23 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.5,778 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் வரும் ஆண்டு நெல் கொள்முதல் செய்ய சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.100-ம், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.75-ம் ஊக்கத்தொகையாக வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ரூ.1,000 கோடியில் பெருந்தட திட்டம்
* காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதற்காக தஞ்சையில் புதிய வட்டார புத்தொழில் மையம் ஒன்று தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கம் மூலம் உருவாக்கப்படும். இந்த வேளாண் தொழில் பெருவழி தடத்தின் மூலம் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து திறம்பட செயல்படுத்தும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருந்தட திட்டம் செயல்படுத்தப்படும்.
அதிக விளைச்சல்
* வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
* குறுவை பருவத்தில் குறைந்த நீர்த்தேவையுள்ள சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை ஊக்குவித்திட, வரும் நிதியாண்டில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்றுப் பயிர் சாகுபடிக்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
200 இளைஞர்களுக்கு உதவி
* 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல்லுக்கு பின் மாற்றுப்பயிர் சாகுபடி மேற்கொள்ள உதவி அளிப்பதற்காக வரும் ஆண்டில் ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்படும். வரும் ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக ரூ.2 லட்சம் வீதம் நிதியுதவி வழங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விதை உரிமம், உர உரிமம், பூச்சி மருந்து உரிமம் ஆகியவை தேவைக்கேற்ப வழங்கப்படும்.
* சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீட்டில் 60 ஆயிரம் வேளாண் கருவிகள் தொகுப்பு வினியோகம் செய்யப்படும். குறிப்பாக, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் தொகுப்புகள் வழங்கப்படும்.
* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 32 மாவட்டங்களில், 14,500 எக்டேர் பரப்பில், 725 தொகுப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகள் இயற்கை சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க, சான்று கட்டணத்திற்கு 10 ஆயிரம் எக்டேருக்கு மானிய உதவி அளிக்கப்படும். வரும் ஆண்டில் இதற்கென, ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் வேளாண்மை பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.