விவசாயிகளுக்கு ரூ.37 லட்சம் நலத்திட்ட உதவிகள்
மானாமதுரையில் விவசாயிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.;
மானாமதுரையில் விவசாயிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
கண்காட்சி
மானாமதுரை தோட்டக்கலைத்துறை சார்பில் உயர் சாகுபடி தொழில்நுட்ப கண்காட்சி மானாமதுரையில் நடந்தது. இந்த கண்காட்சியை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விவசாயம் முழுமையாக நடைபெறுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே ரசாயனங்களும், உரங்களும் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களிலேேய விளைவிக்க கூடிய தன்மை இங்குள்ள மண்ணுக்கு இருக்கிறது என்றார்.
இந்த கண்காட்சியில் மா, கொய்யா, நெல்லி, தக்காளி, கத்தரி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவது, விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவது எப்படி என? விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. விவசாயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வேளாண் கருவிகள், தொழில்நுட்பம் உள்ளிட்டவைகள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்
நிகழ்ச்சியில் மாவட்டத்தின் 50 விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க 50 சதவீத மானியத்தில் நிதி உதவி வழங்கப்பட்டது. வெங்காயம், தக்காளி போன்ற பொருட்களை இருப்பு வைக்க கிட்டங்கி கட்ட 50 சதவீத மானியமும் வழங்கப்பட்டது. ரூ.37 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
கண்காட்சியில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வந்து கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியில் குறைந்த செலவில் மகசூல் ஈட்டிய விவசாயிகளின் வேளாண் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாம்பழம், திராட்சை, அன்னாசி உள்ளிட்ட பொருட்களில் இருந்து பழரசம் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. முடிவில் தோட்ட கலைத்துறை உதவி இயக்குனர் நன்றி கூறினார்.
இதில் தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) செ.சக்திவேல், சிவகங்கை வேளாண் துணை இயக்குனர் கதிரேசன், குன்றக்குடி பேராசிரியர் செந்தூர் குமரன் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுகன்யா, வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி, வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலை துறை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.