ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் கைது

மணப்பாறையில் மகளிர் சுயஉதவிக்குழு கடனுக்கு ஒப்புதல் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-16 18:44 GMT

மணப்பாறை, ஆக.17-

மணப்பாறையில் மகளிர் சுயஉதவிக்குழு கடனுக்கு ஒப்புதல் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் கைது செய்யப்பட்டார்.

பெண் மேலாளர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் பெறுவது தொடர்பான ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுறது. இந்த அலுவலகத்தின் மேலாளராக மல்லிகா (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மணப்பாறையை சேர்ந்த மகளிர் குழு தலைவரான ராஜலட்சுமி என்பவர் தாட்கோ மூலம் ரூ.5 லட்சம் கடன் பெற முயற்சித்தார். இந்த கடனுக்கு ரூ.2.50 லட்சம் மானியமாக வழங்கப்படும். இந்நிலையில் ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு ஒப்புதல் அளித்து அதை விடுவிக்க மேலாளர் மல்லிகா ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுறது. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று ராஜலட்சுமி கூறியதால், இறுதியில் மல்லிகா ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜலட்சுமி இது குறித்து திருச்சியில் உள்ள லஞ்சஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று அவர் ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரத்தை மேலாளர் மல்லிகாவிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, மறைவான இடத்தில் நின்று இருந்த லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மல்லிகாவை கையும், களமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்