புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர்பவனி

கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

Update: 2023-09-10 21:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

திருவிழா

கோத்தகிரி பஸ் நிலையம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக கோத்தகிரி பகுதியை சேர்ந்த அன்பியங்கள் சார்பில், தினமும் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் முக்கிய நாளான நேற்று புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7, 8 மற்றும் 9 மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் கோத்தகிரி பங்கு தந்தை அமிர்தராஜ் முன்னிலையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடைபெற்றது.

தேர் பவனி

மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய மாதா சொரூபம் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடம்பர தேர் பவனி நடந்தது. ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு ஆரோக்கிய மாதாவை வழிபட்டு சென்றனர். இதையொட்டி கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், பதி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்