100 இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம்

Update: 2022-10-09 17:19 GMT


கொ.ம.தே.க. கலை இலக்கிய அணி சார்பில் 100 இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம் நேற்று அவினாசியில் நடைபெற்றது. இதை கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பெருஞ்சலங்கை ஆட்டம் அரங்கேற்றம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஈசன் பெருஞ்சலங்கை ஆட்டக்குழு, கொங்கு பண்பாட்டு மையத்தின் சார்பில் உள்ளி விழவு என்ற கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் நேற்று இரவு அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. 100 இளைஞர்கள் முறையான பயிற்சி பெற்று சத்தியபிரமாணம் எடுத்து நாட்டார் ஆதிசிவனை நெருப்பாக வழிபாடு செய்து அரங்கேற்றம் செய்தனர்.

இந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு கொ.ம.தே.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., சிரவை அதீனம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கொங்கு பண்பாட்டு மைய தலைவரும், கட்சியின் கலை இலக்கிய அணி துணை செயலாளருமான ஆதன் பொன்.செந்தில்குமார் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள்.

ஒழுக்கத்தை வளர்க்கும் சலங்கையாட்டம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

சலங்கையாட்டம் என்பது பாரம்பரிய கலைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குமான கலையாகும். மலேசியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சலங்கையாட்டம் நடத்தினோம். அப்போது அங்குள்ள மலேசிய அதிபர் சலங்கையாட்டத்தை பார்த்து மீண்டும் ஒருமுறை ஆடுமாறு விருப்பம் தெரிவித்தார்.

இளைஞர்கள் போதைப்பொருட்களில் இருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதுபோன்ற பெருஞ்சலங்கையாட்ட பயிற்சியில் ஈடுபட்டால் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட தீய எண்ணங்கள் தானாகவே மறைந்து விடும். சலங்கையாட்டம் என்பது குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கக்கூடியது. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரங்கேற்றம் செய்யும் சலங்கையாட்ட வீரர்களுக்கும், பயிற்சி அளித்தவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அகநானூறில்

கொ.ம.தே.க. கலை இலக்கிய அணி துணை செயலாளரும், கொங்கு பண்பாட்டு மையத்தின் தலைவருமான ஆதன் பொன்.செந்தில்குமார் பேசியதாவது:-

கொங்கு வேளாளர்களுக்கான ஆட்டம் உள்ளி விழவு என்னும் பெருஞ்சலங்கையாட்டம். பகுத்தறிந்த ஆன்மிகம் நம்மிடம் உள்ளது. அகநானூறு, புறநானூறு பாடல்களை சங்க புலவர்கள் பாடி வைத்துள்ளனர். அந்த 800 பாடல்களில் 400 பாடல்கள் கொங்கு நாட்டு மக்களையும், கொங்கு மண்ணை பற்றியும், கொங்கு வீரர்களை பற்றியும் பாடப்பட்டுள்ளது. வீரமும், மாண்பும் கொண்டவர்கள் கொங்கு மக்கள். மருதஇளநாதனார் என்ற சங்க புலவர் அகநானூறில் 368-வது பாடலில் உள்ளி விழவு பற்றி கூறியுள்ளார். கொங்கர்கள் கோவிலுக்கு வெளியே இரவு நேரத்தில் ஆடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சலங்கையாட்டத்தை பற்றி கூறியுள்ளனர்.

மூத்த குடிகளான கொங்கு வேளியர்களின் தனிப்பெரும் நடனம் உள்ளி விழவு என்னும் பெருஞ்சலங்கையாட்டம். ஆதிசிவனை நெருப்புடையவனாக வழிபடுவது தான் இந்த சலங்கையாட்டம். இன்றைக்கும் கம்பம் போட்டு கம்பத்தின் மேல் பூவோடு வைத்து நெருப்பை ஆண் சக்தியாக சிவனாக வழிபட்டு வருகிறோம். மதங்களும், மொழிகளும் செம்மைப்படுத்துவதற்கு முன்பான மூத்த மொழி கொங்கு தமிழ். மூத்த இனம் கொங்கர்கள் இனம். தொன்மையான சமுதாயம் நாம். குடகு கொங்குநாடான கர்நாடகாவில் ஹளபீர் என்ற இடத்தில் பெருஞ்சலங்கையாட்ட சிற்பம் உள்ளது. இதை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். 11-வது நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது.

அழிவில்லாத சிவபெருமான் என்பதே அவினாலிங்கேஸ்வரர் ஆவார். முதலை உண்ட பாலகனை 3 ஆண்டுகளுக்கு பிறகு வளர்ந்த தோற்றத்தில் இந்த தெப்பக்குளத்தில் இருந்து மீட்டுக்கொடுத்தார் என்பதே இந்த தலத்தின் மகிமை, ஆயுள் யாகம் இந்த கோவிலில் செய்வதுண்டு. அந்த சிவபெருமானின் ஆசியோடு பெருஞ்சலைங்கையாட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

படைக்கலன் பெறுதல்

கொங்குநாட்டு அரசர், சங்கரண்டாம்பாளையம் 35-வது பட்டக்காரர் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாவுடையார் கொங்கு சலங்கை வீரர்களுக்கு படைக்கலன் வழங்கினார். நாட்டார் வழிபாடு, சலங்கை பூஜை, நிறைநாழி ஊர்வலம், வீரவாளெடுத்து படைக்கலன் பெறுதல் நடைபெற்றது. கொங்குநாட்டு வரலாறு, பாடல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. சலங்கையாட்ட வீரர்களுக்கு மலையம்பாளையம் காலபைரவர் கோவிலில் சசிக்குமார்-சிவக்குமார் ஆகியோரும், பூலுவப்பட்டியில் உள்ள எஸ்.ஆர்.பெட்ரோல் விற்பனை நிலையத்தில் செல்லன் மோகன், பிரகாஷ், சங்கர் ஆகியோரும் பயிற்சி அளித்தனர்.

பின்னர் பெருஞ்சலங்கை ஆட்ட அரங்கேற்றத்தில் பங்கேற்றவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட கலைக்குழுவினர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

பங்கேற்றவர்கள்

சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி, பொருளாளர் கே.கே.சி.பாலு, தீரன் சின்னமலை கல்லூரி செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், தலைவர் முருகசாமி, கொங்கு நண்பர்கள் சங்க செயலாளர் அமராபதி அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் அறிவிப்பாளர் மற்றும் தமிழறிஞர் சூரிய காந்தன், திரைப்பட இயக்குனர் நவீன், திரைப்பட பாடகர் நவீன் பிரபஞ்சன், ஆன்மீக சொற்பொழிவாளர் ஞானபாரதி ஆனந்த கிருஷ்ணன், ரிதம் நிட் இந்தியா நிறுவனத்தின் நடராஜ், கொங்கு வர்த்தக கூட்டமைப்பு தலைவர் வசந்த்குமார், கிட்கோ இயக்குனர் செல்வராஜ், பல்லடம் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தீரன் படை தலைவர் மாடிக்கோவில் செல்வக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்