ஊதிய உயர்வு விவகாரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு

ஊதிய உயர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-31 23:04 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வேளாண் துறையில் தட்டச்சராக பணியாற்றும் எஸ்.சுரேஷ் உள்பட 18 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய குழு பரிந்துரைகளில் முரண்பாடு காணப்பட்டதால், அதை சரி செய்ய ஒரு நபர் கமிஷனை அரசு அமைத்தது.

இந்த கமிஷன், ஊதிய விகிதங்களை மாற்றி அமைத்து பிறப்பித்த அரசாணைகளில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது என கூறியிருந்தது.

இதை மீறி உள்துறை உள்ளிட்ட பல துறைகளில் 2009-ம் ஆண்டுக்கு பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4,500 பேருக்கு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, எங்களுக்கும் சலுகை வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், "2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4,500 பேரின் பட்டியலையும், இவர்களில் ஒவ்வொரு துறைக்கும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர், எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டு உள்ளது? என்ற விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்