நெகமத்தில் மண் அடுப்பு விற்பனை அமோகம்

சமையல் கியாஸ் விலை உயர்வு எதிெராலி காரணமாக நெகமத்தில் மண் அடுப்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update:2022-07-19 21:59 IST

நெகமம்,

சமையல் கியாஸ் விலை உயர்வு எதிெராலி காரணமாக நெகமத்தில் மண் அடுப்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கியாஸ் விலை உயர்வு

தமிழத்தில் தற்போது நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் கியாஸ் அடுப்புகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால் உணவு பொருட்கள் மட்டுமின்றி அனைத்து வகையான பொருட்களும் விலை உயரும் நிலை ஏற்பட்டது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.ஆயிரத்தை தாண்டியுள்ளதால் இல்லத்தரசிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே செலவை குறைக்கும் வகையில், பலரும் மீண்டும் மண் அடுப்பை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நெகமம் பகுதியில் மண் அடுப்புகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மண் அடுப்பு வியாபாரிகள் கூறியதாவது:-

மண் அடுப்பு பயன்பாடு அதிகரிப்பு

கியாஸ் அடுப்புகள் பயன்பாடு அதிகரித்த பிறகு பெரும்பாலும் மண் அடுப்பு உற்பத்தியையே நிறுத்தி விட்டார்கள். தற்போது வருமானத்தின் ஒரு பகுதியை சமையல் கியாஸ் சிலிண்டருக்கு செலுத்த வேண்டி உள்ளது. இதனால் கிராம பகுதிகளில் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே செலவை குறைக்கும் வகையில் பலர் மண் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

கியாஸ் விலை உயர்வு எதிரொலி காரணமாக மீண்டும் மண் அடுப்பு விற்பனை அதிரித்து உள்ளது. மேலும் மண் பானைகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மண் பானைகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புகை போக்கியுடன் கூடிய அடுப்பு

மண் அடுப்புகளில் ஒரு பாத்திரம் வைத்து சமைக்கும் ஒற்றை அடுப்பு, 2 பாத்திரங்களை வைத்து சமைக்கும் வகையில் கொடி அடுப்புடன் கூடிய இரட்டை அடுப்பு மற்றும் 3-க்கும் மேற்பட்ட பாத்திரைங்களை வைத்து சமைக்கும் வகையில் கோட்டை அடுப்பு என்று பல வகைகள் உண்டு. இதுதவிர கரியை உபயோகித்து சமைக்கும் வகையிலான குமுட்டி அடுப்பு என்று ஒருவகை உண்டு. அதிலும் மண் அடுப்புகளில் புகை போக்கியுடன் கூடிய வடிவமைப்பின் மூலம் புகையில்லாமல் சமைக்க முடியும்.

இதுதவிர குழாய் பொருத்தப்பட்டு உள்ள மண் பானைகளுக்கு கோடை காலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் கோவில் திருவிழாவுக்கான சுடுமண் பொம்மைகள், மண் விளக்குகளும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தற்போது மண்பாண்ட தொழில் புத்துணர்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்