3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் 3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-06-06 03:30 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் 3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

பொள்ளாச்சி நகராட்சியில் 69 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 270 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சியில் சுகாதார பணிகள் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வீடு, வீடாக சென்று குப்பைகளை பிரித்து வாங்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 140 தூய்மை பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியதாக தெரிகிறது.

இதற்கிடையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அப்போது முழுமையாக அனைவரையும் வேலைக்கு எடுக்க முடியாது, 50 வயதிற்கு மேற்பட்டவர்களை சேர்க்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

சட்டத்திற்கு புறம்பானது

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், சட்டப்படி 60 வயது வரை அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். ஆனால், 50 வயதிற்கு மேல் உள்ளவர்களை பணியில் சேர்க்க முடியாது என்கின்றனர். இது சட்டத்திற்கு புறம்பானதாகும். மேலும் சிலரை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வதாக கூறுகின்றனர். அனைவரையும் வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். எங்களது கோரிக்கையை ஏற்காததால் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சியில் நிரந்தர அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களில் 12 பேர் பணி ஓய்வு பெற உள்ளனர். அந்த இடங்களுக்கு மீண்டும் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும் 228 பேரில் 143 பேர் வேலைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். 25 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களை மட்டும் சேர்க்க வேண்டும் என அரசாணையில் உள்ளது. இதற்கிடையில் மேலும் 41 பேரை பணியில் சேர்க்க நகராட்சி நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்