அம்மாபேட்டை அருகே தான் படித்த அரசு பள்ளியை சென்று பார்த்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி- வகுப்பறைகளை மேம்படுத்த ஆசிரியர்களுடன் ஆலோசனை
அம்மாபேட்டை அருகே தான் படித்த அரசு பள்ளியை நேரில் சென்று பார்த்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வகுப்பறைகளை மேம்படுத்த ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.;
அம்மாப்பேட்டை
அம்மாபேட்டை அருகே தான் படித்த அரசு பள்ளியை நேரில் சென்று பார்த்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வகுப்பறைகளை மேம்படுத்த ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூரை சேர்ந்தவர் பி.சதாசிவம். முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், முன்னாள் கேரள கவர்னருமான இவர் அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தான் படித்த சிங்கம்பேட்டை அரசு பள்ளிக்கு பி.சதாசிவம் வந்தார். அவரை தலைமை ஆசிரியர் நாகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றார்கள். பின்னர் தான் அமர்ந்து படித்த வகுப்பறைகளை பி.சதாசிவம் சென்று பார்த்து நெகிழ்ந்தார். மேலும் பழைய நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
வகுப்பறைகளை மேம்படுத்த
மேலும் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம், தன்னைப்போல் நன்றாக படித்து உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என்று அறிவுரை கூறினார். அதன்பின்னர் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் அவர் பேசும்போது, பள்ளிக்கு தேவையானவற்றை செய்து வகுப்பறைகளை மேம்படுத்த வேண்டும்.
அதற்கு தேவையான வசதிகளை செய்ய இந்த பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள், அரசியல் பிரமுகர்களுடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றார்.
பிறகு பள்ளியின் ஒரு பகுதியில் ஆசிரியர்கள் அமைத்துள்ள காய்கறி தோட்டத்தை பார்வையிட்டார். மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளி வளாகத்தில் செல்லும் மின்கம்பங்களை அகற்ற மின்வாரிய அதிகாரிகளிடம் கூறவேண்டும் என்றார்.