உயிரை பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தை கடந்து சென்று வரும் பள்ளி மாணவர்கள்

புதுப்பட்டு பகுதியில் பாதை வசதி இல்லாததால் உயிரை பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தை கடந்து சென்று வரும் பள்ளி மாணவர்கள் மேம்பாலம் அமைத்துதர கோரிக்கை

Update: 2022-09-12 16:23 GMT

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பட்டு இந்திரா நகரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களின் குழந்தைகளை பவுஞ்சிப்பட்டுக்குட்பட்ட குமாரமங்கலத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். இதே போல் பவுஞ்சிப்பட்டு குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மேல்நிலை படிப்புக்காக புதுப்பட்டில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் குமாரமங்கலத்துக்கும், இந்திராநகருக்கும் இடையே முஸ்குந்தா ஆறு செல்கிறது. இந்திராநகரில் இருந்து குமாரமங்கலம் தொடக்கப்பள்ளிக்கும், குமாரமங்கலத்தில் இருந்து மேல்நிலை படிப்புக்காக புதுப்பட்டுக்கும் வந்து செல்லும் மாணவ-மாணவிகள் இந்த ஆற்றை கடந்து தான் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. போதிய பாதை வசதி இல்லாததால் மழை மற்றும் பெரு வெள்ள காலங்களில் உயிரை துச்சமென மதித்து ஆற்று வெள்ளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு சென்று வரும் போது ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அதை கடந்து செல்லும் மாணவ-மாணவிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. அடுத்த மாதம் பருவமழை தொடங்க உள்ள நிலையில் காட்டாற்று வெள்ளத்தை ஆபத்தான நிலையில் மாணவ-மாணவிகள் கடந்து செல்லும் அவல நிலையை தடுத்து நிறுத்தி போதிய பாதை வசதி ஏற்படுத்தி தருவதோடு, உடனடியாக மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் ஒலித்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்ககள் கூறுகையில், அத்தியாவசிய தேவைகளுக்கும், இப்பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை புதுப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் உயிரை பணயம் வைத்து முஸ்குந்தா ஆற்றை கடந்து தான் அழைத்து சென்று வருகிறோம். மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வரும்போது லக்கிநாயக்கன்பட்டி வழியாக சுமார் 15 கிலோ மீ்ட்டர் தூரம் சுற்றி புதுப்பட்டுக்கு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி இப்பகுதியில் சிறு மேம் பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட மாவட்ட கலெக்டர் மேம் பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்