உழவர் சந்தைகளில் ரூ.73¾ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

Update: 2023-03-21 20:09 GMT

பங்குனி அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.73¾ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.

பங்குனி அமாவாசை

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர், தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, எடப்பாடி என 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு வரும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று பங்குனி அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. சந்தைகளில் அகத்திக்கீரை, வாழை இலை, வாழைப்பழம், கத்தரிக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்றவைகள் அதிக அளவில் விற்பனையானது.

சூரமங்கலம் உழவர் சந்தையில் 201 விவசாயிகள் மொத்தம் 45 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதன்மூலம் ரூ.15 லட்சத்து 40 ஆயிரத்து 669-க்கு விற்பனை ஆனது.

ரூ.73¾ லட்சத்துக்கு விற்பனை

இதுகுறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் கூறும் போது, 'பங்குனி அமாவாசையையொட்டி மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளுக்கு 983 விவசாயிகள் 205 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவை ரூ.73 லட்சத்து 77 ஆயிரத்து 489-க்கு விற்பனை ஆனது. இந்த காய்கறிகளை 52 ஆயிரத்து 693 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்