இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு விடப்பட்ட செம்மறி ஆடுகள்

நீடாமங்கலம் பகுதி வயல்களில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு செம்மறி ஆடுகள் விடப்பட்டன.

Update: 2023-02-14 18:45 GMT

நீடமங்கலம்:

நீடாமங்கலம் பகுதி வயல்களில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு செம்மறி ஆடுகள் விடப்பட்டன.

இயற்கை உரம்

ஆடு, மாடுகளின் கழிவுகள் பயிர்களுக்கு மிகச்சிறந்த இயற்கை உரம் ஆகும். ரசாயண உரங்களை தவிர்த்து இயற்கை உரத்துக்கு மாறினால் மட்டுமே நாம் இழந்த சூழ்நிலை சமன்பாட்டை பெற முடியும் என வேளாண் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரிப்பு பயிர்களில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதால் இனி வரும் நாட்களில் விவசாயிகள் மீண்டும் பழைய முைறப்படி இயற்கை உரங்களை பயன்படுத்த வயல்களில் ஆட்டுக்கிடை அமைக்க தொடங்கி உள்ளனா். பயிர் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் இயற்கை உரத்துக்காக வயல்களில் ஆட்டுக்கிடை அமைப்பதால் ஆடு வளர்ப்பவர்களுக்கு கணிசமான அளவு வருவாய் கிடைக்கிறது.

அறுவடை

நீடாமங்கலம் வட்டாரப் பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடவு பணி முடிந்து தற்போது கதிர்கள் முதிர்ந்து எந்திர மூலம் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பருவம் தவறி பெய்த மழையால் ஏராளமான நெற் கதிர்கள் தரையில் படிந்து நாசமானது. சில இடங்களில் சுமாராக இருந்த நெற்கதிர்களையும் மழை நீரில் சாய்ந்து படிந்த கதிர்களையும் அறுவடை செய்யும் பணி நடை பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் சில விவசாயிகள் சாகுபடி செய்து முன் கூட்டியே அறுவடை பணியை முடித்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் இருந்து...

இந்தநிலையில் முன்கூட்டியே அறுவடை பணிகள் முடிந்த வயல்களில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மேய்ச்சலுக்கு இயற்கை உரத்துக்காக ஆடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. நீடாமங்கலம் அருகேயுள்ள கட்டையடி, ரிஷியூர் பகுதிகளில் சுமார் 500- க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மேய்சலுக்கு கொண்டு வந்து பணியாளர்கள் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏக்கரில் ஆட்டுக்கிடை அமைக்க ரூ.600 செலவாகிறது என விவசாயிகள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்