நாங்குநேரியில் கடையடைப்பு போராட்டம்; வெறிச்சோடிய நகரம்

அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வலியுறுத்தி நாங்குநேரியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-27 11:51 GMT

நாங்குநேரி:

நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் என்று தனியாக பிரிந்ததை அடுத்து நெல்லை மாவட்டத்திற்கான சுகாதாரத் துறை உதவி இயக்குனர் அந்தஸ்தில் மாவட்ட மருத்துவமனை அமைக்க நாங்குநேரி தேர்வு செய்யப்பட்டு கடந்த ஆண்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து நாங்குநேரி தாலுகா தலைமை மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் நாங்குநேரியில் மாவட்ட மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு கடந்துள்ள நிலையில் நாங்குநேரிக்கு அறிவிக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியானது. இந்நிகழ்வு நாங்குநேரி தொகுதி மக்களிடையே கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் உருவாக்கி யுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் நாங்குநேரியில் அனைத்து அரசியல் கட்சியினர் சமூக நல அமைப்புகள் வியாபாரிகள் விவசாய சங்கங்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவுடன் நாங்குநேரிக்கு அறிவிக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனையை மாற்றாமல் நாங்குநேரியிலே அமைக்க கோரி நாங்குநேரியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் நாங்குநேரியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இதனால் நாங்குநேரி தாலுகா அலுவலகம் பெரும்பத்து உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களிலும் பால் காய்கறிகள் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்கள் உள்பட எதுவும் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஆட்டோ வாடகை வாகன ஓட்டுநர்கள், வக்கீல் சங்கத்தினர் உள்பட பல்வேறு சமூக சேவை அமைப்பினரும் பங்கு பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்